அவருடைய நட்சத்திரம்

கிறிஸ்துவின் பிறப்பை கூறும் வேதாகமத்தின் சுவிசேஷ பகுதிகளில், அவர் பிறப்போடு சம்பந்தப்பட்ட அநேக கதாபாத்திரங்களை நாம் காண முடியும். அவர்களின் நடுவே ஒரு நட்சத்திரத்தையும் வேதம் நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது. (மத் 2:1-9) 

ஆண்டவரின் பிறப்பை மேய்ப்பர்கள் அறியவும், அறிவிக்கவும் தேவதூதர்கள் பயன்பட்டது போல, புறஜாதிகளாகிய ஞானிகள் அறியவும் ஆராதிக்கவும் நட்சத்திரம் தேவனால் பயன்படுத்தப்பட்டது. 

“ஒரு துறையில் பயன்படுகிறவர்களையும், பிரபலமானவர்களையும்  நட்சத்திரம் என்று அழைப்பதுண்டு.” (விளையாட்டு நட்சத்திரம்,  சினிமா நட்சத்திரம்,  பிரபல நட்சத்திரம்).  ஜனங்கள் ஆண்டவரை அறியவும் ஆராதிக்கவும் அவர்களை நீங்கள் வழிநடத்துவீர்களானால் (தானி 12:3), நீங்களும் “அவருடைய நட்சத்திரமே” (மத் 2:2). 

அவருடைய நட்சத்திரமாய் நாம் ஜொலிக்க, அந்த நட்சத்திரம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்.

.

  1. கிழக்கிலே தோன்றிய நட்சத்திரம் (மத் 2:2).

கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.”  (மத் 2:2).

நட்சத்திரங்களை ஆராய்கின்ற வானவியல் சாஸ்திரிகளுக்கு, அந்த நட்சத்திரம்  ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசமாய் காணப்பட்டது

நம்முடைய வாழ்க்கையும் வார்த்தையும் மற்றவர்களைவிட தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டதாய், வித்தியாசமானதாய்  காணப்படும் என்றால், நாமே அவருடைய நட்சத்திரம்.

.

  1. அவருடைய நட்சத்திரம் (மத் 2:2).

“கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.”  (மத் 2:2).

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் பற்பல பெயர்களில் அழைக்கப்படும் போது, இந்த நட்சத்திரம் அவருடைய நட்சத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. காரணம், இது அவருக்காகவே தோன்றி, அவருக்காகவே செயல்பட்டது.

நம்முடைய சிந்தையும் செயலும், வாழ்வின் அனைத்து அம்சங்களும் அவருக்காகவே இருக்கும் என்றால், நாமே அவருடைய நட்சத்திரம்.

.

  1. வழிமாறா நட்சத்திரம் (மத் 2:9).

“இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.”  (மத் 2:9).

ஞானிகள் தங்கள் சுய சிந்தனையையினால், வழிமாறி அரண்மனையில் பிரவேசித்தபோதும், தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பில் இறுதிவரை நிலைத்திருந்து  வழிநடத்திய நட்சத்திரம்.

நமக்கு கொடுக்கப்பட்ட  ஊழியங்களில், பொறுப்புகளில் தடம் மாறாது, தடுமாறாது இறுதிவரை நிலைத்திருந்து செயல்படுவோமானால் நாமே அந்த நட்சத்திரம். 

நம்மால் வழிநடத்தப்படுகிறவர்கள் கூட பின்வாங்கி போகலாம், சோர்ந்து போகாமல் நம்முடைய ஊழியங்களில், பொறுப்புகளில் நிலைத்திருப்போமாகில், பின்வாங்கி போனவர்களும் திரும்பி வருவர் (மத் 2:9).

.

  1. முன்சென்ற நட்சத்திரம் (மத் 2:9).

“இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.”  (மத் 2:9).

இந்த நட்சத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட வேலை, பிள்ளையாகிய கிறிஸ்துவிடம் ஞானிகளை வழிநடத்த வேண்டும் என்பதாகும். ஆகையால்,  கிறிஸ்து பிறந்தார் என்பதை அறிவிப்பதற்கு அடையாளமாய்  தோன்றியது மட்டுமல்ல. பிள்ளை இருந்த ஸ்தல மட்டும், முன் சென்று வழி நடத்தினது. 

பிறரை  கிறிஸ்துவண்டை வழிநடத்தி, இறுதிவரை அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வோமென்றால், நாமே அவருடைய நட்சத்திரம்.

.

  1. சந்தோஷம் உண்டாக்கிய நட்சத்திரம் (மத் 2:10).

“அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்..”  (மத் 2:3).

தங்களை வழிநடத்திய நட்சத்திரத்தை சாஸ்திரிகள் திரும்ப கண்டபோது ஆனந்த சந்தோஷமடைந்தனர். 

நாம் பிறருடைய சந்தோஷத்திற்கு சகாயராய் இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்மை காண்கிறதினாலும், நம்மோடு நேரம் செலவழிக்கிறதினாலும் ஜனங்கள் ஆனந்தமும் ஆறுதலும் அடைவார்கள் என்றால், நாமே அவருடைய நட்சத்திரம்.

.

  1. அவரைப் பணிந்து கொள்ளச்செய்த நட்சத்திரம் (மத் 2:2, 11).

“கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.”  (மத் 2:2).

சாஸ்திரிகளை கிறிஸ்துவண்டை வழிநடத்த நட்சத்திரம் முக்கிய பங்கு வகித்தது. நட்சத்திரம் தன் பணியை நிறைவேற்றி அது நிறைவடைந்தது. மகிமையும் ஆராதனையும் ஆண்டவருக்கு மட்டுமே சென்றது. 

நம்முடைய  பொறுப்பை மட்டும் நிறைவேற்றி ஆண்டவருக்கு மட்டுமே மகிமை உண்டாக செய்வோம் என்றால், நாமே அவருடைய நட்சத்திரம்.

.

  1. தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை மட்டுமே நிறைவேற்றின நட்சத்திரம் (மத் 2:9, 12).

“நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது”  (மத் 2:9).

இதுவரை மட்டுமே இந்த நட்சத்திரத்தை காணமுடிகிறது. அதன்பின் சாஸ்திரிகள் திரும்பி செல்லுகிற விஷயத்திலோ, மற்ற வேறு எந்த காரியத்திலும் நட்சத்திரத்தை காணமுடியவில்லை. காரணம், அதற்கு கொடுக்கப்பட்ட  பொறுப்பு அத்தோடு நிறைவுபெற்றது. 

நமக்கு கொடுக்கப்பட்ட வேலையில், அதற்கு உட்பட்ட எல்லைக்குள் மட்டுமே தேவ சித்தத்தின்படி செயல்படுவோம் என்றால்,  நாமே அவருடைய நட்சத்திரம்.

நம்முடைய வேலை ஜனங்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து, அவரண்டை வழிநடத்தி, அவர்கள் அவரைப் பணிந்துகொள்ள செய்வது மட்டுமே!

 “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” தானியேல் 12:3

கே. விவேகானந்த் 

Leave a Reply

Your email address will not be published.

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: