TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
1 யோவான்7Bible StudyNotesவேத ஆராய்ச்சி

யோவான் தனது முதலாவது நிருபத்தை எழுதியதின் நோக்கம் 

அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதலாம்  நிருபத்தை ஏன் எழுதினார் என்பதை, அவர்தானே தனது நிருபத்தின் ஊடாக ஏழு காரணங்களை எழுதியுள்ளார். 

  1. சந்தோஷம்  நிறைவாயிருக்கும்படி எழுதுகிறார்.

“உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.”  (1 யோ 1:4).

நாம் நிறைவான சந்தோஷம் உள்ளவர்களாய் வாழ வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார் (யோவான் 15:11). 

  • நாம் தேவனை விசுவாசிப்பதினால்  “சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்” களிகூறுவதாக பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 1:8).
  • கிறிஸ்துவோடுள்ள உறவு ( ஐக்கியம்) நம்முடைய சந்தோஷத்தை நிறைவாக்கும் ( யோவான் 15: 7-11).
  • ஜெபத்திலே அவரோடுள்ள ஐக்கியம் நிறைவான சந்தோஷத்தை கொடுக்கும் (யோவான் 16:24).

ஆகவேதான் யோவான் “ஐக்கியமுள்ளவர்களாகும்படி… உங்களுக்கு எழுதுகிறோம்” (1 யோ 1:3,4) என்கிறார். அந்த ஐக்கியம் சந்தோஷத்தின் நிறைவுக்கு நம்மை  நடத்தும். இவ்வித ஐக்கியதற்கு சத்தியத்தின்படி நடத்தல் அவசியம் (1 யோ 1:6, 7).

  1. பாவம் செய்யாதிருக்கும்படி எழுதுகிறார். 

“நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:1).

பாவத்தின் மீதான வெற்றி வாழ்க்கைக்கு, யோவான் இந்த நிருபத்தின் மூலமாய் விசுவாசிகளை உற்சாகப்படுத்துகிறார்.

  • பாவத்தை நாம் மூடி மறைக்க வேண்டாம் 1:8
  • பாவத்தை நாம் அறிக்கையிட்டால் மன்னிக்க தேவன் ஆயத்தமாயிருகிறார் 1:9
  • இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் 1:7 
  • தற்செயலாய் ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால் “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1 யோவான் 2:1).
  1. பழையதும் புதியதுமான கற்பனையை எழுதுகிறார்..

“ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்… மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:7, 8).

பழையதும் புதியதுமான இந்த கற்பனை, தேவனிடத்திலும், மற்றவர்களிடத்திலும்  அன்பாய் இருக்க வேண்டும் என்பதாகும் ( உபா 6:4-6, யோவா 13:34). 

  • ஒருவரில் ஒருவர் அன்பு கூறுதல் என்பது ஆதிமுதல் இருந்த கட்டளையாக இருந்தாலும், இது ஏன் புதியது என்று அழைக்கப்படுகிறது என்றால், இந்தக் கட்டளையின்  தனிமையில் புதுமை இருக்கிறது. 
  • இயேசு கிறிஸ்துவின் அன்பின் மூலமாக இந்தக் கட்டளையின் தன்மை என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறார் (1 யோ 4:7-11).
  • “ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள்”  என்ற கற்பனை கால அளவின்படி அல்ல;  தரத்தின்படியே இது புதியது

பழைய கட்டளையே திரும்ப சொல்வது போல இருந்தாலும், புதியது கடைபிடிக்க வலியுறுத்துவதும், அதன் முன்மாதிரியிலும் பழையதை விட சிறந்தது 

  1. ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படி எழுதுகிறார். 

“பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்” (1 யோ 2:14).

  • பிதாக்களைப் போல தேவனை அறிந்து…
  • வாலிபரை போல   பொல்லங்கனை ஜெயித்து…
  • பிள்ளைகளைப் போல தேவனுக்குக் கீழ்ப்படிந்து…  

நாம் ஆவிக்குரிய குடும்பத்தில் உள்ளவர்கள். பாவம் மன்னிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள். ஆகவே, ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படி எழுதுகிறார் (1 யோ 2:12).

  1. வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு எழுதுகிறார் 

“உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.” (1 யோ 2:26).

  • இது கடைசிக் காலமானபடியால், கள்ள போதனைகளால் வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு, அறிந்த சத்தியத்தில்  நிலைத்திருக்கும்படி எழுதுகிறார் (1 யோ 2:18, 21-27).
  • சத்தியம் ஒன்றுக்கொன்று ஒருபோதும்  முரண்பட்டதாக இருக்காது (1 யோ 2:21). 
  • இயேசு கிறிஸ்துவை பற்றியதே சத்தியம், கிறிஸ்துவை மறுதலிப்பது கள்ள போதகர்களின் கள்ள போதனை (1 யோ 2:22, 23). 
  • புதிய ஏற்பாட்டிலே “அந்திகிறிஸ்து” என்ற வார்த்தையை யோவான் மட்டுமே பயன்படுத்துகிறார். இறுதி நாட்களில் அந்திக்கிறிஸ்து வருவான்,  ஆனால் இங்கு யோவான் அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடைய கள்ள போதகர்களை (பன்மையில்) குறிப்பிடுகிறார் (1 யோ 2:18).

கள்ள போதனைகளால் வஞ்சிக்கப்பட்டு போகாதபடி ஆதி முதல்  கேட்ட வசனத்தில் நிலைத்திருந்தால்,  ஆவியானவர் சகல சத்தியத்திற்கும் உங்களை நடத்துவார். 

  1. நித்திய ஜீவனை பற்றிய நிச்சயத்தை அறியும்படி எழுதுகிறார்.

“உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும்… இவைகளை எழுதியிருக்கிறேன்.” (1 யோ 5:13).

  •  தேவன் நமக்கு ஒரு அழியா வாழ்வை கொடுத்திருக்கிறார். அது ஒரு ஈவு, அது ஒருக்காலும்  நம்மை விட்டு எடுபடாது என்பதை அறியும்படி எழுதுகிறார். 
  • நாம் தேவனுடைய பிள்ளைகள் தான் என்ற உறுதியை (இரட்சிப்பின் நிச்சயத்தை) உடையவர்களாய் இருக்கும்படி இந்த நிருபம் எழுதப்பட்டிருக்கிறது.
  1. தேவ குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறபடியால் எழுதுகிறார். 

“தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1 யோ 5:13).

  • யோவான் சுவிசேஷம் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று  விசுவாசிக்கும்படி எழுதப்பட்டது ( யோவா 20:31)
  • 1 யோவான் நிருபம் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று  விசுவாசிக்கிறதினால் உண்டாகும் நிச்சயத்தை குறித்து  எழுதப்பட்டுள்ளது.
    • நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற நிச்சயம் (1 யோ 5:13).
    •  நம்முடைய ஜெபங்களுக்கு பதில் உண்டு என்ற நிச்சயம் (1 யோ 5:14, 15).
    • நாம் தேவனால் பிறந்தவர்களானதால் பாவம் செய்வதில்லை என்ற நிச்சயம் (1 யோ 5:18).
    • நாம் தேவனை அறிந்தவர்கள் என்ற நிச்சயம் (1 யோ 5:20). 

K. Ramkumar Evg  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)