TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Bible StudyNotesவேதவசனம்வேதாகமம்

திருவசனத்தை கேட்கும் போது…

என்றைக்கும் இல்லாத அளவுக்கு இந்த நாட்களில் அதிகமான பிரசங்கங்களை கேட்கின்றோம். அவை நல்ல விஷயம் தான். ஆனால் அளவுக்கு அதிகமாக கேட்டு கேட்டு இன்றைக்கு ஆவிக்குரிய அஜீரணம் தேவ பிள்ளைகளுடைய வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது. இது ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல. வேத வாக்கியம் “ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்.” (லூக் 8:18) என்று எச்சரிக்கிறது.

ஆகையால், திருவசனத்தை கேட்கும்போது…

1. அகத்தில் அங்கீகரிக்க வேண்டும்.

“அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.” (மத் 26:21,22)

கேட்கின்ற வசனம் எனக்குரியது என்கிற எண்ணம் வேண்டும்.

2. அமைதியாய் அசைபோட வேண்டும்.

“மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.” (லூக் 2:19)

கேட்ட வசனத்தை மனதிலே வைத்து சிந்தனை செய்ய வேண்டும்.

3. ஆழமாய் ஆராய வேண்டும்.

“அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.” (அப் 17:11)

பெரோயா பட்டணத்தாரை போல வசனத்தை ஆராய வேண்டும்.

4. அனுபவத்தில் அப்பியாசிக்க வேண்டும்.

“நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” (யாக் 1:22)

கேட்ட வசனத்தை வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும்.

5. அருவருப்பை (ஆகாயத்தை) அகற்ற வேண்டும்.

“சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” ( 1 பேது 2:2,3)

வசனத்திற்கு ஏற்காததை வாழ்க்கையில் ஒழித்து விட வேண்டும்.

6. அறிந்ததை அறிவிக்க வேண்டும்.

“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு,” (கொலோ 3:16)

கிறிஸ்துவின் வசனம் நம்மில் நிறைந்திருக்கும் போது அந்த வசனத்தை மற்றவர்களுக்கு அறியாமல் இருக்க முடியாது.

7. ஆண்டவரை ஆராதிக்க வேண்டும்.

“உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங் 138:2)

வசனத்தை கேட்பது எப்போதுமே நம்மை தேவனை துதிப்பதற்கு நேராக நடத்த வேண்டும். 

இவ்விதமாய் வசனத்தை கேட்கும்போது ஆவிக்குரிய அஜீரணம் ஒருபோதும் ஏற்படாது.  கேட்கின்ற வசனம் நம்மை கர்த்தருக்குள் புஷ்டி உள்ளவர்களாய் மாற்றும்.

ஆகையால் திருவசனத்தை கேட்கும்போது…

  1. அகத்தில் அங்கீகரி 
  2. அமைதியாய் அசைபோடு
  3. ஆழமாய் ஆராய்ந்துபார் 
  4. அனுபவத்தில் அப்பியாசி 
  5. ஆகாததை அகற்று 
  6. அறிந்ததை அறிவி 
  7. ஆண்டவரை ஆராதி

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)