யாருமே என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!
நாம் அனுதினமும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று உறவு ரீதியானது. குடும்பத்தில், வேலை ஸ்தலத்தில் மற்றவர்களோடு இணைந்திருப்பதில் நமக்கு பல சிக்கல்கள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் நமக்கு அனுதினமும் போராட்டம் உண்டு. ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போவது என்பது சவாலானது. தனக்கு ஏற்றவாறு யாரும் இல்லை என்பதும் தன்னைப் போல் எவரும் எல்லை என்பதும் அன்றாட புலம்பல்களில் ஒன்று. அதிலும் எந்த பிரச்சனை வந்தாலும் மற்றவர்களை குற்றம் சாட்டுவது ஒருவருக்கு எளிதாக இருக்கின்றது. தன்னை ஆராய்வதும் தனது குறைகளை கண்டுபிடிப்பதும்தான் மிகவும் கடினம். மற்றவர்கள் அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள் என்று அடுக்குவது எல்லோருக்கும் கைவந்த கலை, ஆனால் தன்னுடைய குறைகளை அடையாளம் காண்பது அநேகரிடத்தில் இல்லை! இப்படிப்பட்ட குணாதிசயம் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் கூடிக்கொண்டேதான் இருக்கும், அதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் ஒரு இளைஞனை ஆலோசனைக்காக அழைத்து வந்திருந்தார்கள். அவன் மிகவும் மனம் சோர்ந்து போயிருந்தான். உலகமே அவனுக்குக் கசப்பானதாகத் தோன்றியது. மருத்துவர் அவனிடம் வெகு நேரம் உரையாடிய பின்புதான் அவன் தனது மனபாரத்தை அவரிடம் வெளிப்படுத்தினான். அவன் விசனத்துடன் சொன்னவை, “யாருமே என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க டாக்டர். புரிஞ்சுக்காத ஆளுங்க கூட வாழவே பிடிக்கவில்லை,” என்றான். இதைக் கேட்டதுமே மருத்துவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். அவனுக்கோ எரிச்சல் மேலிட்டது. மருத்துவர் சொன்னார், தம்பி, இது மிகவும் சிறிய பிரச்சனைதான். இதற்காகவா இப்படி நொறுங்கிப் போனாய்? நாளை காலையில் உன் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு உண்டாகும். அது வரை நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள், என்றார். மருத்துவர் கூறியதில் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.
மறுநாள் காலை எழுந்து ஆயத்தமாகி மருத்துவருக்காகக் காத்திருந்தான். மருத்துவர் சுருட்டப் பட்டிருந்த ஒரு வெள்ளைத் தாளுடன் வந்தார். தாளை அவன் கையில் கொடுத்தார், “இதைப் படித்துப் பார், மிகவும் அருமையான ஆலோசனை. இதைப் படித்ததனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மை அடைந்திருக்கிறார்கள். நானும் பல முறை இதைப் படித்துத் தெளிவடைந்திருக்கிறேன். உன் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு இதில் உண்டு” என்றார். அவனும் ஆர்வமாய் வாங்கிப் பிரித்தான். மருத்துவர் கொடுத்த காகிதத்தை வாங்கிப் பிரித்ததுமே அவனது முகம் வாடிப் போய்விட்டது. அதிலிருந்த எழுத்துக்களெல்லாம் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தன. அமைதியாக அவரிடமே திரும்பக் கொடுத்து விட்டான். மருத்துவர் கேட்டார், “என்னப்பா, உனக்குத் தேவையான இவ்வளவு பெரிய ஆலோசனையை ஒரே நொடியில் அலட்சியமாய்த் திரும்பக் கொடுத்து விட்டாயே?” என்றார், அவன் “எனக்கு மலையாளம் படிக்கத் தெரியாதே” என்றான். அவர் விடவில்லை. என்னப்பா சொல்ற? எத்தனையோ பேருக்கு உபயோகமா இருந்த அந்த ஆலோசனை உனக்குப் பயன்படாதா? எனக்கே அது உபயோகமா இருக்குதே! என்றார். இப்போது சற்று கோபத்துடன் பதில் வந்தது. அது “எவ்வளவு நல்ல விஷயமா இருந்தா என்னங்க? எனக்குப் புரியாத மொழியிலல்ல இருக்கு? என்னைப் பொறுத்த வரைக்கும் அது உதவாத வெற்றுத்தாள்தான்.” இவ்வளவு படிச்சிருக்கீங்க. இது கூடவா தெரியாது என்று சீறினான்.
மருத்துவர் துளியும் கவலைப் படவில்லை. மாறாகப் புன்னகையுடன் சொன்னார். நான் உனக்குக் கொடுத்ததென்னவோ பலருக்கும் பயனுள்ள விஷயந்தான். இருந்தாலும் உனக்கு அது புரியாமல் போனது உன்னுடைய தவறல்ல. உனக்குத் தெரியாத மொழியில் கொடுத்த என் தவறுதான். அதுபோலவே “உன்னிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தும் மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையென்றால் அது அவர்களுடைய தவறல்ல. அவர்களுக்குப் புரியும்படி நீ அவற்றை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.” மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி உன்னை அவர்களுக்குப் புரியும் வகையில் வெளிப்படுத்து. அனைவருக்குமே பயன்படுகிறவனாக இருப்பாய் எல்லாருமே உன்னைப் புரிந்து கொள்வார்கள்” என்றார்.
ஆம் பிரியமானவர்களே! என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் எல்லோரும் ஏங்குகின்றோம், ஆனால் ஏன் இன்னும் மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்பதை நாம் கண்டுபிடித்துக்கொள்வதில்லை. ஒருசிலர் பார்த்தவுடன் நல்லவர்கள் போல தோற்றமளிக்கலாம் ஆனால் பழகினால்தான் அவர்களில் நிஜம் தெரியும். ஒருசிலர் பார்க்கும்போது மோசமானவர்களை போல தோற்றமளிக்கலாம் ஆனால் பழகினால்தான் அவர்கள் நல்லவர்கள் என்பது புரியும்.
முதலாவது ஒருவரை புரிந்துகொள்வதற்கு அவர் தன்னை முழுமையாக யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. உள்ளான மனுஷன் ஒருவிதம், வெளியான மனுஷன் ஒருவிதம் என்று இரண்டு தன்மைகள் ஒருவரிடம் இருக்கின்றது என்பதை நாம் ஒத்துக்கொள்வோம். நாம் மறைவிடத்தில் யார்? மற்றவர் முன்பாக யார் என்பது நமக்கு மட்டுமே தெரியும். நாம் இப்படி நடந்துகொள்வோம் என்பதை ஒருசில வேளைகளில் நமக்கேகூட தெரிவதில்லை. வேதம் சொல்லுகிறது “மனிதன் வேஷமாகவே திரிகின்றான்” என்று. அது எவ்வளவு உண்மையான வார்த்தை. உண்மையுள்ள மனிதனை கண்டுபிடிப்பது கடினம், உண்மையாக வாழ்வது அதைவிட கடினம். உண்மையாக வாழ்வது கடினமாக இருக்கலாம் ஆனால் ஒருவர் உண்மையாக வாழ்ந்தால் அவரை கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதில்லை. ஏனெனில் உண்மை மறைந்திருப்பதில்லை.
ஒருவர் பரிசுத்தமாகவோ, தேவனுக்கு பயந்தவராகவோ வாழ்வார் என்றால் அவரது நிஜத்தன்மை வெகு சீக்கிரத்தில் அடையாளம் காணப்படும். உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக என்று பிலிப்பியர் 4: 5 ல் வாசிக்கின்றபடி நமது நற்குணங்கள் வாசனையாக அநேகருக்கு முன்பாக தெரியவேண்டும். நன்மையானவைகளை இந்த உலகம் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளாது ஆனால் கிறிஸ்து நம்மிடம் இருப்பதை சரியான குணத்தின் மூலம் வெளிப்படுத்தவேண்டியது நமது கடமை. நமது குணங்கள் நிஜமாக நீடித்து இருக்கும்போது நிச்சயம் நம்மை புரிந்துகொள்வார்கள்.
ஆரம்பத்தில் நம்மை அவசரப்பட்டு பேசியவர்கள் கூட நமது நிஜமான குணத்தை கண்டுகொள்வார்கள். ஒருவருடைய மேலோட்டமான செயல்களை வைத்து ஒருவர் குணாதிசயத்தை தீர்மானித்துவிடமுடியாது ஆனால் ஒருவரின் நிஜமான குணாதிசயத்தின் அடிப்படையில்தான் ஒருவரின் நிரந்தரமான செயல்கள் இருக்கும். தேவன் நமக்குள் இருக்கின்றார் எனபதை நம்முடைய கிரியைகள் வெளிப்படுத்திவிடும். எனவே நாம் நடிக்காமல் நிஜமாக இருந்தால் நம்மை இந்த உலகம் நிச்சயம் அடையாளம் கண்டுகொள்ளும். தேவன் நமக்குள் வாசம்செய்கின்றார் என்பதை நமது கிரியைகளில் வெளிப்படுத்துவோம்! ஆமேன்!
– ஜெபத்துடன்
ஸ்டீபன் ஜேம்ஸ் – பெரம்பலூர்

கர்த்தருக்கு தோத்திரம் சகோதரரே அடியேனுக்கு விளக்கங்கள் தந்திருக்கிறீர் நன்றி