TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7கட்டுரைவேதாகம பெண்கள்

கனவு பெண்மணி

கனவு பெண்மணி 

(மகளிர் தினத்தில் மகளிருக்கான ஓர் மடல்)

அன்பான சகோதரிகளுக்கு,

  கர்த்தருடைய நாமத்தில் அன்பான வாழ்த்துக்கள்.

 நலம், நலமறிய ஆவல்.  உங்களுக்கு  இந்த மடலின் முலம் அறிமுகம் செய்வதில்  மகிழ்ச்சி அடைகிறேன். 

இராஜாவாகிய லேமுவேலுக்கு அவரின் தாயார், குணசாலியான தாயும் மனைவியும் எப்படி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி சொன்ன கனவு பெண்மணி நான்தான்.  என்னைப்பற்றி நான் ஒன்றும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை, உங்களுக்கு சந்தேகம் என்றால் நீதிமொழிகள் 31ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள்.

  எனக்கே ஆச்சரியமாயிருந்தது,  முத்துக்களைவிட விலையுள்ளவளாம் நான்! (10வச).  பலவிதமான நகைகள்தான் விலை மதிப்புள்ளது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் போது, அந்த ஆபரணங்களுக்கே மதிப்பு கொடுக்கக்கூடிய  முத்தைவிட நான் மதிப்புள்ளவள் என்பதை அறியும்போது என்னை பற்றி எனக்கே மதிப்பு கூடியது.

என் கணவர் என் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார் (11வச). காரணம் நான் இதுவரைக்கும் அவருக்கு  நன்மையானதை தான் செய்கிறேன், என் உயிர் உள்ளவரைக்கும் அப்படியே இருப்பேன் (12வச).  அதனால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வருகிறதில்லை  மற்றவர்களுக்கு முன் அவருடைய பெயருக்கு கலங்கம் வருகிற விதமாய் நான் நடந்து கொள்வதே இல்லை (23வச). அதனால்தான் அவர் என்னை “ குணசாலியான பெண்கள்  அநேகருண்டு,  அவர்கள் எல்லாரிலும்  சிறந்தவள் நீயே” என்று புகழ்கிறார் பாருங்களேன்! (28 வச).

என்னுடைய பிள்ளைகளுடைய விஷயத்திலும் நான் மிகுந்த அக்கறையுள்ளவள்.  வீட்டில் நடக்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் நான் கண்ணும் கருத்துமாய் இருப்பேன் (27வச).  அவர்கள் தவறு செய்தால் திட்டித் தீர்க்க மாட்டேன் அன்போடு கூட அறிவுரை சொல்வேன், அதே நேரத்தில் ஞானமாய் பேசுவேன் (26வச).  அவர்களுக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன வேண்டும் என்பதை அறிந்து அவர்களுக்கு அதை செய்து கொடுக்கின்றேன்.  அவர்களின் ஆடைகளின் விஷயத்திலும் கூட அக்கறையுடன் இருப்பதால் அவர்களை குறித்து எந்த பயமும் கவலையும் எனக்கு இல்லை (21வச).  இவ்வளவாக அவர்களின் எல்லா காரியங்களிலும், நான் மிகவும் கவனமாக இருந்தபடியால் அவர்கள் பெரியவர்களான பின்பும் என்னைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள் (28வச).

பொதுவாக எனக்கு வேண்டியதை நானே செய்து கொள்வேன் (22வச). மற்றவர்களுடைய கையை எதிர்பார்த்து அவர்கள் எனக்கு இதைச் செய்து தருவார்களா? அதை செய்து தருவார்களா? என சோம்பேறி போல இருக்க மாட்டேன் (27வச).  ஓய்வு நேரத்தில்  கதை பேசி கழிப்பதில் எனக்கு விருப்பமில்லை.  அதிகாலையில் எழும்பும் பழக்கம் எனக்குண்டு (15வச).  ஆகவே என் வீட்டு வேலைகளை சரியாக செய்ய எனக்கு நேரம் உண்டு, சமையல் செய்யும் நேரம் போக எனக்கு அதிக நேரம் இதனால் கிடைக்கிறது.

  எப்பொழுதும் உற்சாகமாக (13வச),  சுறுசுறுப்போடு (17வச) இருப்பது தான் எனக்கு பிடிக்கும். எனக்கு சில கைத்தொழில்கள் தெரியும் (19வச),  அதனால் எங்கள் குடும்பத்திற்கு தேவையான துணிகளை நானே  தைத்துக் கொள்கிறேன் (22வச), ஓய்வு கிடைக்கும்போது மற்றவர்களுக்கும் தைத்துக் கொடுக்க இதனால் கொஞ்சம் வருமானமும் வருகிறது (24வச),   என்னை வியாபாரம் கப்பலுக்கு ஒப்பிட்டு பேசுவார்கள் (14வச).

  எந்த காரியத்தை செய்தாலும் தீர ஆலோசித்து செய்வதே என்னுடைய பழக்கம்,  எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அப்படித்தான் (16வச).  அளவுக்கு மீறி அதையும் இதையும் வாங்கிப்போட்டு அவதிப்படும் எனக்கில்லை.  பிரயோஜனமற்ற நேரப்போக்கான  ஒன்றையும் நான் செய்வதில்லை,  நான் செய்யும் எல்லாம் பிரயோஜனமுள்ளது என எனக்கு தெரியும் (18வச).  பிரயோஜனமான அனைத்தையும் கற்றறிந்து வைத்திருக்கிறேன் (19வச).

 எதிர்காலத்தைக் குறித்து எனக்கு  நல்ல நம்பிக்கை இருக்கிறது ஆகவே நான் கவலைப்படுவதே இல்லை,  எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்(25வச). என்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் (29வச),  என்னுடைய செயல்களால் எல்லோராலும் புகழப்படுகிறேன் (31வச).  எல்லோருக்கும் முன் மாதிரியான ஒரு பெண்ணாகவே விளங்க விரும்புகிறேன் (29வச).

  கடைசியாக சகோதரிகளே!  இவைகள் எல்லாவற்றையும் விட நான் கர்த்தருக்கு பயந்து நடக்க கூடியவள். நான் மேலே சொன்ன என்னுடைய குணங்கள் எல்லாவற்றுக்கும் மூல காரணம் இதுவே. “ அழகு அற்றுப்போகும் எழில் ஏமாற்றும் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்” (30வச)

நான் கனவு  பெண்ணாகவே இருக்க விருப்பமில்லை, உங்களில் என்னை காண விரும்புகிறேன், என்னை நிஜப்படுத்த உங்களாலேயே முடியும்!  உங்களால் மட்டுமே முடியும்!!

 அன்புடன் குணசாலி

K. Vivekananth, Evg 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)