சீனாய் மலையிலா? சீயோன் மலையிலா?

கர்த்தரை ஆராதிப்பது என்பது நமக்கு கிடைப்பெற்ற மாபெரும் சிலாக்கியம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவசமூகம் என்பது பயமும், நடுக்கமுடைய ஒன்றாக இருந்தது. இன்றோ ஆனந்த களிப்புடன் அவர் சந்நிதியில் ஆராதிக்கும் சிலாக்கியம் பெற்றோம்.

இவை இரண்டின் வேறுபாட்டை, பழைய உடன்படிக்கையின் சீனாய் மலையின் அனுபவத்தோடும், புதிய உடன்படிக்கையின் சீயோன் மலையின் அனுபவத்தோடும் விளக்குகிறது எபிரெயர் 12:18-24 வரையுள்ள பகுதி.

சீனாய் மலை நியாயப்பிரமாணத்தை கொண்டுள்ளது, சீயோன் மலை விசுவாசப்பிரமாணத்தை கொண்டுள்ளது.

சரீரப்பிரகாரமானதும், பூமிக்குரியதுமானது சீனாய் மலை, ஆவிக்குரியதும், பரலோகத்துக்கடுத்ததுமானது சீயோன் மலை.

சீனாய் மலையாகிய பழைய உடன்படிக்கை தேவனுக்கும், மனிதனுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்தியது, சீயோன் மலையாகிய புதிய உடன்படிக்கை கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக தேவபிரசன்னத்திற்குள்ளும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமில் வாசம்பண்ணவும் வரவழைத்திருக்கிறது.

இவை இரண்டின் வேறுபாட்டை சிந்திக்கும்போது, புதிய உடன்படிக்கையின் விசுவாசிகளாகிய நாம் வந்து சேர்ந்திருக்கிற, அடைந்திருக்கிற மாபெரும் சிலாக்கியத்தை எண்ணி அவரை துதிப்போம்.

சீனாய் மலையின் பயங்கரத்தை பத்து காரியங்களின் மூலமாக எபிரெய ஆசிரியர் எடுத்துச் சொல்கிறார் (எபி 12:18-21).

ஆனால், சீயோன் மலையின் அனுபவமோ (தேவபிரசன்னத்தில் வந்திருக்கும் நிலையோ), ஏழு வகை ஆனந்த சிலாக்கியத்தில் பிரவேசிக்க செய்திருக்கிறது என்று எழுதுகிறார் (எபி 12:22-24).

சீயோன் மலையாகிய தேவபிரசன்னத்தில் வந்திருக்கும் நாம்…

1. ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடத்திற்கும்

            இஸ்ரவேலர் பண்டிகை ஆசரிக்கும்படியாக வருடத்திற்கு மூன்று முறை எருசலேமுக்கு வருவார்கள், நாமே என்றென்றுமாக குடியிருக்கும்படி பரம எருசலேமுக்கு அழைக்கப்பட்டுள்ளோம்.

2. ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களிடத்திற்கும்

            இனிவரும் காலத்தில் எண்ணடங்கா தூதர்களோடு சேர்ந்து ஆராதிக்கப்போகிறோம் (வெளி 5:11,12). இப்பொழுதோ, நம்முடைய இரட்சிப்பின் மகிழ்ச்சி எத்தகையது என்பதை அறியாது நம்மை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

3. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையிடத்திற்கும்

            கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட சகல விசுவாசிகளோடும் அங்கிருக்கப்போகிறோம்.

4. யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும்

            அவனவனுடைய கிரியைகளுக்கு தக்கதாக பலனளிக்கிறவருக்கு முன்பாக நிற்கப்போகிறோம் (2 கொரி 5:10, எபி 4:13).

5. பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளிடத்திற்கும்

            கிறிஸ்துவி இரத்தத்தால் பூரணமாக்கப்பட்ட விசுவாசிகளோடு (எபி 10:14), இணைந்து பூரணமாக்கப்படும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடு அங்கிருக்கப்போகிறோம்.

6. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திற்கும்

            தன்னுடைய மரணத்தின் மூலம் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நமக்கருளிய இயேசு கிறிஸ்துவும் அங்கிருக்கிறார்.

7. நன்மையானவைகளை பேசுகிற தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும்

            இதனை சிலாக்கியங்களும் நமக்கு கிடைத்தது, கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகவே. இதன் மேன்மை, பாவிகளான நம்மை மன்னித்து அவர் சமூகத்தில் சேர்த்திருக்கிறது (வெளி 1:6).

ஆபேலின் பழிவாங்கும்படி முறையிடுகிறது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ, இத்தனை நன்மைகளை கொண்டு வந்திருக்கிறது.

இத்தனை பெரிய சிலாக்கியங்களையுடைய சீயோன் மலையின் (தேவபிரசன்னத்தின்) சிலாக்கியங்களுக்குள் கொண்டு வந்த கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மேன்மையை எண்ணி பிதாவாகிய தேவனை தொழுதுகொள்வோம். அவருக்கே சதாகாலமும் மகிமையுண்டாவதாக! ஆமென்.

Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: