TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7Bible Studyவேத ஆராய்ச்சிவேதவசனம்

வேத வசனத்தினால் பிரயோஜனம் என்ன?

வேதாகமம் தேவனால் நமக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட அன்பின் கடிதம். ஒவ்வொரு தேவ பிள்ளையும் வேதாகமத்தை வாசிக்க வேண்டியது அவசியமும், ஆவிக்குரிய ஆரோக்கியமுமாகும். இன்று ஒவ்வொரு நாளும் நாம் வேதாகமத்தை வாசிக்கிறோம், நல்லது, அதனால் நமக்கு என்ன பிரயோஜனம் உண்டாகியிருக்கிறது என்பதை சிந்தித்து இருக்கிறீர்களா? 

இன்று பலரும் பல்வேறு காரணங்களுக்காக வேத வசனங்களை வாசிக்கலாம். சிலர் தாங்கள்  கிறிஸ்தவர்கள் என்ற காரணத்திற்காக வாசிக்கலாம், சிலர்  தங்களுடைய இலக்கிய அறிவை, மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ள வாசிக்கலாம். சிலர் அனேக வசனங்களை அறிந்து வைத்திருப்பது பெருமையாக எண்ணி வாசிக்கலாம். பிறருக்கு போதிக்க வேண்டுமே என்ற நோக்கத்தோடும் வேத வசனத்தை வாசிப்பவர்களும் உண்டு. குறைகளைக் கண்டுபிடித்து கிறிஸ்தவர்களுடன் வாதம் செய்யும்படியாகவும் வேதவாக்கியங்களை வாசிப்பவர்களும் இருக்கிறார்கள். 

இவைகளில் ஆவிக்குரிய பிரயோஜனம் ஒன்றுமில்லை. ஆனால், வேத வசனத்தின் மூலமாக உண்டாகும் உண்மையும், மேன்மையுமான ஆவிக்குரிய பயன்களை அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:15 முதல் 17  வரையுள்ள வசனங்களில் விளக்கியுள்ளார். இங்கு சொல்லபட்டுள்ள காரியங்கள், வேத வசனம் “நம்மூலமாகவும், நம்மிலும் உண்டாக்கும் 7 பயன்களை” பட்டியலிடுகிறது.

.

வேத  வசனத்தினால் உண்டாகும் பிரயோஜனம்

  1.  இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்காளாக்குகிறது (3:15).

“கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை,”

ஒரு மனிதன் இரட்சிப்பைக் குறித்து வேத வசனத்தின் மூலமாகவே அறிந்துகொள்ளுகிறான். இரட்சிப்பின் நிச்சயம் வேத வசனத்தின் மூலமாகவே ஒரு மனிதனுக்கு உண்டாகிறது.

  1.   தேறின தேவ மனிதனாக்குகிறது (3:16).

“தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்,” 

தேவனுடைய வசனத்தை ஒரு மனிதன் கற்றுக்கொள்ளும் போது, அவன் எல்லாவிதத்திலும் தேர்ச்சி அடைந்தவனாக மாறுகின்றான்.  அதாவது அவன் ஒரு முழு வளர்ச்சியை பெறுகிறான்.

  1.  நற்கிரியைக்கு தகுதிபடுத்துகிறது (3:16).

“எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,” 

 ஒருவன் நற்கிரியைகளினால்  இரட்சிக்கப்படுவதில்லை; ஆனால், இரட்சிக்கப்பட்ட ஒருவன் நற்கிரியை செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது (எபே 2:5-8). இந்த அறிவை வேத வசனத்தின் மூலமாக பெறுகிறான். வேதம் நற்கிரியை செய்யும்படியாக அவனை உற்சாகப்படுத்துகிறது. 

  1. உபதேசிக்கிறது (3:17).

“உபதேசத்துக்கும்,” 

தேவன், மனிதன், பாவம், சாத்தான்,  இரட்சிப்பு, பரிசுத்தம், தேவனுடைய சபை, பரலோகம்,  நித்தியம் போன்ற அநேக காரியங்களை நாம் கற்றுக்கொள்ளவும், பிறருக்கு கற்றுக் கொடுக்கவும் வேதவாக்கியம் பிரயோஜனப்படுகிறது.

  1. கடிந்துகொள்கிறது (3:17).

“கடிந்துகொள்ளுதலுக்கும்” 

ஒருவன் வேத வசனங்களை வாசிக்கும்போது, தேவனுக்கு பிரியமில்லாத பாவங்களை உணர்த்துகிறது.  தவறுகளை கண்டிக்கிறது. மேலும், சாத்தானின் சதியில்  சிக்குண்டோரை உணர்த்த உதவுகிறது.

  1. சீர்திருத்துகிறது (3:17).

“சீர்திருத்தலுக்கும்” 

வேத வசனம் தவறுகளை சுட்டிக்  காண்பிப்பது மட்டுமல்ல, அதனை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதற்கான வழியையும் காண்பிக்கிறது. 

  1. நீதியை  படிப்பிக்கிறது (3:17).

“நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” 

ஒரு தேவனுடைய பிள்ளை நீதியாய் வாழ வேண்டியது அவசியம். வேத வசனமானது நீதியாய் வாழ வேண்டியதின் அவசியத்தையும்,  அவசரத்தையும் போதிப்பது மட்டுமல்ல, அதற்கு தேவையான அனைத்தையும் நமக்குத் தருகிறது. 

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)