குளிர்காலம்

ஒவ்வொரு காலங்களுக்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. வசந்த காலம் வரும்பொழுது, பூத்துக்குலுங்கும் மலர்களையும், புத்தம் புதிய செடி கொடிகளையும் பூமி எங்கும் நாம் காணலாம். கோடைக்காலம் வெப்பமான சீதோஷ்ணத்தையும், உஷ்ணமான நாட்களையும், கொண்டு வருகிறது. அந்நாட்களில் நிலங்கள் விளைந்திருப்பதையும், செடிகளில் பழங்கள் பழுத்திருப்பதையும் நாம் பார்க்கலாம். இலையுதிர் காலம் மரங்களில் உள்ள இலைகளை உதிரச் செய்கிறது. அப்பொழுது அறுவடையும் முடிவு பெறுகிறது. குளிர்காலம் தனது குளிர்ந்த கரங்களை எங்கும் பரப்பிக்கொண்டு வருகிறது.

இதுபோலவே தேவனுடைய பிள்ளைகளின் சபைகளிலும் கூட இவ்விதமான வித்தியாசமான காலங்கள் வருகிறதை நாம் பார்க்கலாம். அங்கு, எப்பொழுதும் வசந்த காலமும், கோடை காலமும் நீடித்திருப்பதில்லை. இலையுதிர் காலம் சீக்கிரத்தில் போய்விடும். அதுபோல ஆத்துமாவைச் சோதிக்கக்கூடிய குளிர்காலமும் அங்கு வரும் என்பதை நாம் மறந்து போகக் கூடாது. 

கோடைக்காலம் வரும் வரையில், அங்கு விசுவாசிகளிடத்தில் அன்பும், ஐக்கியமும், சாட்சியுள்ள ஜீவியம் இருப்பதைப் பார்க்கும் பொழுது அது எத்தனை அருமையாக இருக்கிறது! அப்பொழுது அவர்கள், “நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும்… தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும்” காணப்படுகிறார்கள் (எண் 24: 6).

தேவன் தம்முடைய பிள்ளைகளின் மத்தியில் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் சாத்தான் தலையிட்டு, அதைக் கெடுக்கப் பார்ப்பான். அந்த சந்தர்ப்பங்களில், வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைப் பார்க்கிலும், உள்ளேயிருந்து கிளம்பும் குழப்பங்களே மிகவும் கொடியவைகளாக தோன்றும். முன்னது விசுவாசிகள் பலப்படுவதற்கு ஏதுவாயும், பின்னது அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி, அவர்களை பலவீனப்படுத்துகிறதாயும் காணப்படுகிறது.

அப்படியானால், கர்த்தர் ஏன் இவ்விதமான சோதனைகளை வர விடுகிறார் என்று நீங்கள் கேட்கலாம். சுத்திகரிக்கப்பட வேண்டிய பொன் புடமிடப்படுவது போல, தேவன் தமது பிள்ளைகள் பரிசுத்தமுள்ளவர்களாவதற்கு இவ்விதமான சோதனைகளை அவர்களிடையே அனுமதிக்கிறார் என்று நாம் அறிய வேண்டும். 

நம்மால் தீர்த்துக்கொள்ள இயலாத சில துன்பங்களும் சில சமயங்களில் நமக்கு நேரலாம். அந்நேரங்களில் சந்தோஷத்தை இழந்து, வெறுப்பு நம்மை ஆட்கொள்ளலாம். ஒரு கஷ்டம் போனவுடனே மற்றொரு கஷ்டம் வந்து சேரலாம். அப்படிப்பட்ட நேரங்களில் சில விசுவாசிகள், உடன் சகோதர்களை விட்டு போய்விடுவார்கள். அப்படிப்பட்ட குளிர்ந்த காற்று வீசும் பொழுது சபையில், சுறுசுறுப்பும், வெதுவெதுப்பும் இல்லாமல் போய், மற்ற விசுவாசிகளுக்கும் கூட்டங்களில் பிரியமில்லாதபடி போய்விடுகின்றது.

இவ்விதமான குளிர்காலம் வரும்பொழுது, தேவன் கொடுத்த வெப்பமான ஆடைகளை நாம் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. அவையாவன, உருக்கமான இரக்கம், தயவு, மனத்தாழ்மை, சாந்தம், நீடியபொறுமை, ஒருவரையொருவர் தாங்குதல், ஒருவருக்கொருவர் மன்னித்தல், அன்பு, சமாதானம், நன்றியறிதல், கிறிஸ்துவின் ஞானம் நமக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருத்தல், கர்த்தரை பக்தியுடன் பாடுதல், எல்லாவற்றையும் கர்த்தரின் நாமத்தினாலே செய்தல், (கொலோசெயர் 3: 12-17) போன்றவை ஆகும்.

ஏற்ற வேளையில், வசந்த காலம் புதிய ஜீவனோடும், புத்துணர்வோடும் வருவகிறதைப் பார்க்கும்பொழுது, “இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது,” (உன்னதப்பாட்டு 2: 11, 12) என்று நாமும் களிப்போடு சொல்லுவோம்.

பிராங்கிளின் பெர்குசன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: