TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7இயேசு கிறிஸ்துமீகா

யூதருக்கு இராஜாவாய் பிறந்தவர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் மனிதனாக பிறந்த போது, கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள் (மத் 2:2).

இதைக் கேட்டு கலங்கிய ஏரோது, பிரதான ஆசாரியரையும், வேதபாரகர்களையும் அழைத்து, “கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார்?” என்று விசாரித்தான். அதற்கு அவர்கள் “யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்” என்றார்கள். அதற்குக் காரணம், கிறிஸ்துவின் பிறப்பை குறித்து மீகா, 700 ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசனமாய் உரைத்திருந்தார்.

மீகாவின் தீர்க்கதரிசனம் கிறிஸ்து எங்கே பிறப்பார் என்பது மட்டுமல்ல,  இஸ்ரவேலை ஆளப்போகிற இராஜாவாக அவர் பிறப்பார் என்பதே (மீகா 5:2). அந்த இராஜா எப்படிப்பட்டவர் என்பதை மீகாவின் தீர்க்கதரிசன பகுதி (மீகா 5:2-5) நமக்கு விளக்குகிறது.

மீகா, எருசலேமின் அன்றைய கால சூழ்நிலையை விளக்கி (மீகா 5:1), அவர்களை இரட்சிக்க ஒரு இராஜா வருகிறார் என்பதை கூறுகின்றார். அந்த இராஜா எப்படிப்பட்டவர், அவருடைய ஆட்சி எப்படி இருக்கும் என்பதை பின்வரும் வசனங்களில் காணலாம் (மீகா 5:2-5).

இவைகள், நமக்காகவும், நம்மிலும் பிறந்த இயேசு கிறிஸ்துவாகிய மன்னவரின் மகிமையை காண்பிக்கிறது.

1. தாழ்மையின் ரூபம் எடுத்த இராஜா. (மீகா 5:2)

* அற்பமாயிருந்த பெத்லகேமை தெரிந்து கொண்டார்.

* ஞானிகள் வெட்கப்படுத்தும்படி பைத்தியங்களாகிய நம்மை தெரிந்து கொண்டார்.

2. முன்னறிவிக்கப்பட்ட இராஜா. (மீகா 5:2)

* ஆதியாகமம் தொடங்கி வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ராஜா இவர் ( ஆதி 3:15; 2 சாமுவேல் 7:12-13).

* தேவனின் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிற ராஜா இவர்.

3. இரட்சிக்கிறவராகிய இராஜா (மீகா 5:3).

இந்த வசனம் மீகாவின் காலகட்டத்தை குறித்து பேசுகிறது. யூதர்களின் கீழ்படியாமையின் நியாயத்தீர்ப்பை குறித்து மீகா இந்த புத்தகத்தின் பக்கங்களில் கூறியிருக்கிறார் (பிரசவிக்கிறவள், பிரசவிக்கிறவர்களின் வேதனை – மீகா 4:9,10). ஆனால், அதே வேளையில், அந்த நியாயத்தீர்ப்பின் தண்டனையிலிருந்து அவர்களை மீட்டு, இரட்சிப்பார் என்பதையும் கூறுகிறார். (விடுவிக்கப்படுவாய், மீட்பார் – மீகா 4:10).

* பாவத்தின் சம்பளமாகிய நரக தண்டனையிலிருந்தும் நம்மை நீங்களாக்கி மீட்டு இரட்சித்திருக்கிறார். அதற்காக, நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை சிலுவை மரத்தில் ஏற்றுக்கொண்டார்.

4. போஷிக்கிறவராகிய இராஜா (மீகா 5:4).

பெத்லகேமில் பிறந்த ராஜாவாகிய இவர், ஜனங்களின் தேவைகளை சந்திக்கின்ற “மேய்ப்பராகவும் இருப்பார்” என்று மீகா கூறுகின்றார்.

* ஒரு தடையுமின்றி கர்த்தருடைய பலத்தோடும், அவருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்.

* கிறிஸ்துவாகிய ராஜா ஒரு குறையுமின்றி நம்மை நடத்துவார்.

5. பாதுகாப்பவராகிய இராஜா (மீகா 5:4).

“அவர்கள் நிலைத்திருப்பார்கள்” என்ற வார்த்தை அவர்கள் “பாதுகாப்பாக இருப்பார்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* எத்தீங்கும் நம்மை அணுகாமல் பாதுகாக்கும் ராஜா இயேசு கிறிஸ்து.

6. பூமியின் எல்லையெங்கும் உள்ளவர்களுக்கும் இராஜா (மீகா 5:4).

அவர் யூதருக்கு மட்டுமல்ல, அவரை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும் எல்லாருடைய வாழ்விலும் ராஜாவாக இருந்து ஆட்சி செய்வார்.

* அவர் உலக இரட்சகர்.

7. சமாதானக்காரணராகிய இராஜா (மீகா 5:5).

தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் தெய்வீக சமாதானத்தை தருகிறவர் (யோவா 14:27). அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே இந்த சமாதானத்தை உண்டாக்கி இருக்கிறார் ( கொலோ 1:21). அவரை இரட்சகராகவும், இராஜாவாகவும் அங்கீகரிக்க ஒவ்வொருவருடைய வாழ்விலும், இந்த சமாதானத்தை தருகிறார்.

– கே. விவேகானந்த்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)